வெள்ளக்கோவில் அருகே ஃபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படங்கள் பதிவு – காவல்துறையினர் வலை வீச்சு
ஃபேஸ்புக், வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெண் குழந்தைகள், சிறுமிகளின் படங்களை பதிவேற்றம் செய்வதும், அவற்றைப் பார்ப்பதும் தமிழகத்தில் அதிகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
போலி அடையாளத்துடன் சமூக வலைத்தள கணக்குகளை உருவாக்கி, அவற்றின் மூலம் பெண் குழந்தைகள், பெண்களை மோசமாமாகச் சித்தரிக்கும் ஆபாச படங்கள், வீடியோக்கள் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றைப் பார்ப்பதால் சமூகத்தில் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளக்கோவில் – காங்கயம் சாலை ஓலப்பாளையம் பகுதியில் ஏதோ ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஃபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாசப் படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளார். இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர், வெள்ளக்கோவில் காவல் நிலையத்துக்கு கொடுத்த தகவலின் பேரில், போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப முறைகேடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மர்ம நபரின் அலைபேசி எண் கிடைக்கவில்லை. ஃபேஸ்புக் முகவரியும் போலியாக உள்ளது. கிடைத்த சில ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ் நுண்ணறிவுத் தகவலின் பேரில் மர்ம நபரை விரைவில் மடக்கி விடுவோம் என காவல்துறையினர் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் இது இரண்டாவது வழக்காகும். முதல் வழக்கு ஊத்துக்குளியில் போடப்பட்டது.