குப்பைத் தொட்டி, கை கழுவும் இடம், வைஃபை என சகல வசதிகள் கொண்ட ஆட்டோ! – வீடியோ பதிவிட்டு பாராட்டிய ஆனந்த் மகிந்திரா!
குப்பைத் தொட்டி, கை கழுவும் இடம், சானிடைசர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்ட ஆட்டோவின் வீடியோவை பதிவிட்டு ஆனந்த் மகிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து மகிந்திரா & மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திரா சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். அவர் பதிவிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையவாசிகள மத்தியில் பெரும் கவனத்தை பெறும் வண்ணம் இருக்கும். அந்தவகையில், தற்போது மும்பையில் உள்ள ஆட்டோ ஒன்றின் வீடியோவை பதிவிட்டு, ஸ்வச் பாரத் திட்டத்தை ஊக்குவிப்பதற்கு கரோனா காரணமாக இருக்கிறது என்பதுபோல குறிப்பிட்டுள்ளார்.
One silver lining of Covid 19 is that it’s dramatically accelerating the creation of a Swachh Bharat…!! pic.twitter.com/mwwmpCr5da
— anand mahindra (@anandmahindra) July 10, 2020
தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா பதிவிட்டுள்ள வீடியோவில் உள்ள ஆட்டோவில் கை கழுவும் இடம், செடிகள் வளர்க்கப்பட்ட பூந்தொட்டிகள், குப்பைத்தொட்டிகள், சானிடைசர், ஹேண்ட் வாஷ், வைஃபை வசதி என தற்போதைய காலத்தில் ஒரு சிறிய பயணத்திற்கு தேவையான அனைத்தும் உள்ளது.
அந்த ஆட்டோ ரிக்ஷாவின் பின்புறத்தில் வீட்டு அமைப்பில் சிறந்த சேவையை வழங்கும் மும்பையின் முதல் ஆட்டோ ரிக்ஷா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புதிதாக திருமணமான தம்பதிகள் ஆட்டோ ரிக்ஷாவில் இலவசமாக சவாரி செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களுக்கான மாநில ஹெல்ப்லைன் எண்ணும் அந்த ஆட்டோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ வைரலானது. தற்போதுவரை அதனை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதுபோன்ற வசதிகளை அமைத்துள்ள ஆட்டோ ஓட்டுநருக்கு இணையவாசிகள் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.