ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கரோனா தடுப்பு மருந்து: அவசரம் காட்ட வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை- ஐசிஎம் ஆர் பதில்

கரோனா வைரஸ் வேறு வேறு அவதாரங்கள் எடுத்து வருவதால் அது ஒவ்வொரு முறை இரட்டிப்பாகும் போது, பல்கும் போதும் உரு, இயல் மாற்றம் எய்துவது என்பதால் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அதற்கு வாக்சின் என்று அவசரப்பட வேண்டாமென்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனாவுக்கு ‘கோவாக்சின்’ என்ற தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆர், தேசிய வைராலஜி மையம் இணைந்து இந்த தடுப்பு மருந்தைக் கண்டுப்பிடித்துள்ளது.

இதை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதனை செய்வதற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டுக் கழகம் அனுமதி அளித்துள்ளது. வரும் 7ம் தேதிக்குள் இதனை தொடங்கி சுதந்திர தினத்தன்று இது அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று ஐசிஎம்ஆர் நெருக்கடி கொடுப்பதையடுத்து பிரபல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள் தொற்று நோய் விஞ்ஞானிகள் ஆகியோர் அவசரம் காட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்:

‘தடுப்பூசி பரிசோதனைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 12 மையங்களுக்கு ஐசிஎம்ஆர் கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் மையங்களுக்கு மிகுந்த நெருக்கடி கொடுப்பதாக அமைந்துள்ளது. வேகவேகமாக பரிசோதனைகளை முடிக்குமாறு நிர்பந்தப்படுத்தும் வகையில் அந்தக் கடிதம் அமைந்துள்ளது.

ஆகஸ்ட் 15க்குள் பரிசோதனைகளை முடித்து அறிமுகம் செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கிறது. வேகம் பாராட்டுக்குரியதுதான் ஆனால் அதற்காக பரிசோதனை நிபந்தனைகளை, விதிமுறைகளை மீறுவதாக அமைந்து விடக்கூடாது. நோய் எதிர்ப்புச் சக்தி உறுதி செய்யப்பட்டதா, பாதுகாப்பானதா போன்றவை ஐயமற உறுதி செய்யப்படுவது அவசியம்.

மருத்துவ வழிகாட்டுதலின் படி 3 கட்டங்களாக பரிசோதனைகள் நடைபெற வேண்டும், முதலில் சிறிய அளவில், குறைந்த எண்ணிக்கையில் கொடுத்துப் பார்க்க வேண்டும். இரண்டாம் கட்டத்தில் சில நூறு பேருக்காவது கொடுத்து அதன் பலன் சிறப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மூன்றாவதாக சில ஆயிரம் பேருக்கு அளித்து இந்த தடுப்பு மருந்து எவ்வளவு காலத்துக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தக்க வைக்கும் என்பது பற்றி ஆராய வேண்டும்.

இப்படிச் செய்தால் 12 முதல் 18 மாதங்கள் வரை தடுப்பூசி அறிமுகம் செய்ய ஆகும். இப்படியிருக்கையில் அவசரம் காட்டினால் அது சரிப்படாது. அவசரம், நிர்பந்தம் வேண்டாம்’ என்று கூறியுள்ளனர்.

ஐசிஎம்ஆர் பதில்:

நிபுணர்கள் எச்சரிக்கைக்க்கு பதிலளித்த ஐசிஎம்ஆர் உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள், வழிமுறைகளைப் பின்பற்றியே வாக்சின் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் விதிமுறைகள், வழிமுறைகள் என்று எப்போதும் பார்த்துக் கொண்டு அதுவே கண்டுப்பிடிப்புக்கு இடையூறாகி விடக்கூடாது என்பதாலும் கோப்புகள் மெதுவாக நகருவதைத் தடுக்கவும் சுருக்கமாக ‘ரெட் டேப்’ தவிர்க்கவுமே இறுதிக்கெடு அளிக்கப்பட்டுள்ளது, என்று விளக்கமளித்துள்ளது.

ஆனால் ஆகஸ்ட் 15 ஏன் இறுதிக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டது என்பது குறித்து ஐசிஎம்ஆர் விளக்கவில்லை.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply