ஓலா பைக்கை நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்த டாக்டர்.. ஆம்புர் அருகே பட்டபகலில் பயங்கரம்.. பின்னணி என்ன?

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு பெட்ரோல் டீசலை விலை உயர்வால் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக மக்கள் பலரும் ஓலா நிறுவனத்தின் தயாரிப்பிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதில் முனைப்புடன் இருந்தனர்.

ஓலாவின் இ-பைக் புக் செய்த பெரும்பாலானோருக்கு மிக தாமதமாகவே வாடிக்கையாளர்களுக்கு வண்டி சென்றடைந்திருக்கிறது. இருப்பினும் அதில் ஏகப்பட்ட குளறுபடிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன.

இதுபோக, நாட்டின் பல இடங்களில் ஓலா இ-பைக்குகள் இரண்டாக உடைவது, ஓடிக் கொண்டிருக்கும் போதே பற்றி எரிவது, பேட்டரிகள் வெடிப்பது போன்ற அபாயங்கள் நடப்பது தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பிசியோதெரபி மருத்துவரான பிரித்திவிராஜ் என்பவர் பழுதான தனது ஓலா வண்டியை பெட்ரோல் ஊற்றி எரிக்கும் சம்பவம் நடந்திருக்கிறது.

 அதன்படி, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பிரித்திவிராஜ், கடந்த ஜனவரி மாதம் 1,40,000 ரூபாய் கொடுத்து ஓலா பைக்கை வாங்கியிருக்கிறார். வாங்கிய வாகனத்தை பதிவு செய்த முயற்சித்த போது ஓலா நிறுவனத்தாரால் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் ஆம்பூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வண்டியை எடுத்துச் சென்றபோது அங்கு குடியாத்தம் RTO-ல் பதிவு செய்துக்கொள்ளுமாறு கூறியிருக்கிறார்கள்.

இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டு லட்சுமிபுரம் பகுதி வழியாக வந்துக் கொண்டிருந்த போது ஓலா பைக் பழுதாகி நின்றிருக்கிறது. இதனையடுத்து ஓலா சர்வீஸ் சென்டரை அழைத்து பைக்கை சரி செய்ய சொல்லி காலை 10.30 மணியளவில் புகார் கொடுத்திருக்கிறார்.

ஆனால் மதியம் இரண்டு மணி ஆகியும் ஓலா நிறுவனம் தரப்பில் இருந்து எவருமே வாகனத்தை சரி செய்ய வரவில்லை எனக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார் மருத்துவர் பிரித்திவிராஜ். ஏற்கெனவே இது போன்று ஓலா பைக் பழுதாகி வந்தது வழக்கமாகியிருக்கிறது. ஆத்திரமடைந்த மருத்துவர் பிரித்திவிராஜ் பழுதான ஓலா பைக் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார்.

அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, பட்டப்பகலில் ஓலா வண்டியை பெட்ரோல் ஊற்றி எரித்த செயல் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply