பேராணாம்பட்டு பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வால் வீடுகளில் விரிசல்

பேரணாம்பட்டு பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி நடுங்கும் குளிரில் விடிய விடிய வீதியில் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

நில அதிர்வு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்புவரை கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு மழை ஓய்ந்த நிலையில் அந்த பகுதிகளில் திடீர் திடீரென நில அதிர்வு ஏற்பட்டு வருவது மக்களை பீதிக்குள்ளாக்கி வருகிறது. கடந்த 2, 12 ஆகிய தேதிகளில் பேரணாம்பட்டு அருகே உள்ள கமலாபுரம், சிந்தக் கணவாய் கவுராப்பேட்டை, டி.டி. மோட்டூர், பெரிய பள்ளம் ஆகிய 5 கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலையில் பேரணாம்பட்டு டவுன் தரைக்காடு பகுதியில் டிசம்பர் 22-ந் தேதி இரவு 10.20 மணி நில அதிர்வு ஏற்பட்டது. அப்போது டமார் என சத்தம் கேட்டதோடு பாத்திரங்கள் உருண்டன நள்ளிரவு 11.45 மணியளவிலும் அதேபோன்று நில அதிர்வு ஏற்பட்டதால் மீண்டும் அவர்கள் வெளியே தெருவுக்கு ஓடி வந்தனர்.

அப்போது கடும் பனிப்பொழிவும் இருந்தது. குழந்தைகளுடன் அவர்கள் வீதிகளிலேயே அமர்ந்தனர்.

தாலுகா அலுவலக ஊழியர்கள்

நேற்று முன்தினம் வியாழக்கிழமை மதியம் 1.30 மணியளவில் பேரணாம்பட்டு அருகே பாலூர் கிராமத்தில் நில அதிர்வு ஏற்பட்டு பாத்திரங்கள் உருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாலை 3.30 மணியளவில் செர்லப்பல்லி கிராமத்தில் உள்ள பேரணாம்பட்டு தாலுகா அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட நில அதிர்வால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் பத்தலப்பல்லி கிராமத்திலும் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியிலிருந்து 3.05 மணிக்குள் அடுத்தடுத்து 3 முறை நில அதிர்வு உணரப்பட்டது.

பேரணாம்பட்டு நகரில் தரைக்காடு, குப்பை மேடு, எல்.ஆர் நகர், இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளி தெரு, குல்ஜார் வீதி ஒத்தவாடை வீதி, புதுவீதி, உமர் வீதி, மவுலாவதி சார்மினார் வீதி உமர் வீதி, நியாமத் வீதி, ரஹமதாபாத், ஜெயா வீதி, பஜார் வீதி, பூந்தோட்ட வீதி, கலைஞர் நகர், எம்.ஜிஆர் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டன. அப்போது வீடுகளின் கதவுகள் தடதடவென அதிர்ந்தன.

 

வீடுகளில் விரிசல்

பல வீடுகளில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தன. பாத்திரங்கள் உருண்டன. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் பீதியடைந்த பொதுமக்கள் கொட்டும் பனியில் தங்கள் குழந்தைகள், முதியோர்களுடன் கூச்சலிட்டவாறு வீடுகளிலிருந்து வெளியேறி தெருக்களில் விடிய விடிய பரிதவித்து நின்றனர். இது குறித்து வருவாய் துறையினர் சென்று விசாரணை நடத்தினர்.

பேரணாம்பட்டு பகுதியில் இந்த மாதத்தில் மட்டும் தொடர்ந்து 5 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்து காணப்படுகின்றனர்.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply