கர்நாடகத்தில் முழுஅடைப்புக்கு ஆதரவு இல்லை

பெங்களூரு: மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து விவசாய சங்கங்கள் நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.
டெல்லியில் போராட்டம்
இதற்கு கர்நாடகத்தில் 200-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு வழங்கின. அதன்படி நேற்று கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி பெங்களூருவில் அனந்தராவ் சர்க்கிளில் நேற்று காலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அப்போது குருபூர் சாந்தகுமார் நிருபர்களிடம் கூறுகையில், “விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க கர்நாடக அரசு முயற்சி செய்கிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரி விவசாயிகள் கடந்த 9 மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துகிறோம். ஆனாலும் எங்களை போலீசார் கைது செய்துள்ளனர். வரும் நாட்களில் நாங்கள் எங்களின் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்” என்றார்.
வேளாண் சட்டங்கள்
மெஜஸ்டிக் பகுதியில் டாக்டர் ராஜ்குமார் ரசிகர் மன்ற தலைவர் சா.ரா.கோவிந்த் தலைமையில் பல்வேறு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது சா.ரா.கோவிந்த் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு. தார்மிக ஆதரவு என்ற நிலையை மாற்றி அனைவரும் வீதியில் இறங்கி போராட வேண்டியது அவசியம். கடந்த 9 மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். இது மத்திய அரசின் காதுகளில் விழவில்லை” என்றார்.
கர்நாடக விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள், கே.ஆர்.புரத்தில் இருந்து ஊர்வலமாக பெங்களூரு நகருக்குள் வந்தனர். அவர்கள் தங்களின் தலைமீது சாக்கு பைகளை மடித்து போட்டு வேளாண் சட்டங்களுக்கு வினோதமான முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் ஊர்வலத்தால் பழைய மெட்ராஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் உண்டானது.
ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
அப்போது கோடிஹள்ளி சந்திரசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “விவசாயிகள் நடத்தும் இந்த போராட்டத்தின் நோக்கம் என்ன என்பது மக்களுக்கு இன்னும் புரியவில்லை. மத்திய அரசு எல்லாவற்றையும் தனியார் மயமாக்கியுள்ளது. இதை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எங்களின் போராட்டத்தை அரசு ஒடுக்குகிறது. ஆனால் வரும் நாட்களில் நாங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்” என்றார்.
அதைத்தொடர்ந்து விவசாயிகள் சங்க நிர்வாகி படகல்புரா நாகேந்திரா கூறுகையில், “கிராமப்புறங்களில் இந்த முழு அடைப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆனால் பெங்களூரு மக்கள் ஆதரவு வழங்கவில்லை. வரும் நாட்களில் இந்த போராட்டத்தின் நோக்கம் என்ன என்பது இந்த மக்களுக்கு புரியும். இந்த அரசு பஸ்களை இயக்குகிறது. 9 மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். போராட்ட களத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்துள்ளனர். ஆனால் மத்திய அரசு அந்த சட்டங்களை வாபஸ் பெறாமல் விவசாயிகளுக்கு மரண சாசனம் எழுதுகிறது” என்றார்.
போக்குவரத்து நெரிசல்
தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள அத்திப்பள்ளியில் கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அவரை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு டவுன்ஹாலில் போராட்டம் நடத்திய விவசாயிகள் உள்ளிட்ட அமைப்பினர் பிரதமர் மோடியின் உருவப்படத்திற்கு தீவைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதுபோல் மைசூரு, சித்ரதுர்கா, தார்வார் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து பின்னர் மாலையில் விடுதலை செய்தனர். சாம்ராஜ்நகர், மண்டியா, பெலகாவி மாவட்டங்களில் விவசாயிகள் சாலைகளில் அமர்ந்தும், சாலையில் படுத்து உருண்டும் போராட்டம் நடத்தினர்.
ஆயிரக்கணக்கானோர் கைது
சில இடங்களில் விலை உயர்வை கண்டித்த காய்கறிகளை விற்பனை செய்தும், ஆடு-மாடுகளுடனும் போராட்டத்தில் பங்கேற்கு மத்திய அரசுக்கு எதிராக நூதன எதிர்ப்பை தெரிவித்தனர்.
அத்துடன் பல பகுதிகளில் பெண் விவசாயிகளும் போராட்டத்தில் பங்கேற்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தினர். மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
ஆதரவு கிடைக்கவில்லை
விவசாய சங்கங்களால் அறிவிக்கப்பட்ட முழு அடைப்புக்கு கர்நாடகத்தில் ஆதரவு கிடைக்கவில்லை. மாநிலம் முழுவதும் பஸ், ஆட்டோ, வாடகை கார்கள் வழக்கம்போல் ஓடின. பள்ளி-கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பெங்களூருவில் எப்போதும் போலவே போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
முழு அடைப்பையொட்டி தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெங்களூரு பல்கலைக்கழகம், பெலகாவி அக்கமாதேவி பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அதே நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு திட்டமிட்டப்படி நேற்று தொடங்கியது.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply