காஞ்சிபுரத்தில் கமல்ஹாசன் கார் மீது தாக்குதல்.. வாலிபருக்கு தர்ம அடி..
சென்னை: காஞ்சிபுரத்தில் கமல்ஹாசன் கார் மீது பெரும் தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட நபரை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதிமுக, திமுக மட்டுமின்றி மக்கள் நீதி மையம் கட்சி தீவிரம் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறார். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. காஞ்சிபுரம் வேட்பாளர் காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோபிநாத் என்ற வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு கோபிநாத்தை ஆதரித்து கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். காந்தி ரோடு பகுதியில் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்ட போது அங்கு நிறைய பேர் கூடியிருந்தனர். அப்போது நீண்ட தலைமுடியும், லேசான தாடியும் வைத்த ஒரு இளைஞர் கமல் காரை நோக்கி வர முற்பட்டார். அப்போது கமல்ஹாசன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பவுன்சர்கள் அவரை விலக்கி விடுவதற்கு முற்பட்டனர். ஆனால் அவர்களையும் மீறி கமல்ஹாசன் கார் முன் பகுதிவரை வந்த அந்த வாலிபர் வந்து கார் கண்ணாடி மீது தாக்குதல் நடத்தினார். இதில் கண்ணாடியில் ஓரளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அங்கு கூடியிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தர்ம அடி கொடுத்தனர். இதில் அவரது வாயில் ரத்தம் வடிந்தது. இதைப்பார்த்த பாதுகாப்பு போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தாக்குதல் நடத்திய வாலிபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேறு ஏதேனும் அரசியல் காரணம் இருக்கிறதா என்பது பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக கமல்ஹாசன் காயமின்றி தப்பினார். தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்குப்பதிவு நாள் நெருங்கும் நிலையில் ஒரு கட்சி தலைவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகரான ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மயுரா தனது டுவிட்டர் பக்கத்தில், காஞ்சிபுரத்தில் எங்கள் தலைவரின் கார் கண்ணாடியை உடைத்து தாக்க முயன்றவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நேர்மையின் பயணத்தை குள்ளநரித்தனத்தால் எதிர்கொள்பவர்களைக் கண்டு அஞ்சமாட்டோம். தலைவரின் இடிமுழக்கம் நாளை கோவையில். விரைவில் கோட்டையில். இவ்வாறு தெரிவித்துள்ளார்